ஒரு மொழியினை செம்மையுடன் பயன்படுத்துவதற்கு அந்த மொழியில் உள்ள சொற்களையும்
அவற்றினை பயன்படுத்தும் முறையியல்களையும் நாம் நன்கு புரிந்து கொள்ளுதல் இன்றியமையாதது. அந்தவகையில் தமிழ் மொழியை செம்மையாக கற்பதற்கு அதன் சொற்களினையும் அவற்றின் தன்மைகளையும் பயன்பாடுகளையும் நன்கு விளங்கிக்கொள்ளுதல் அவசியமாகும். பொதுவாக "சொல்" என குறிப்பிடுவது ஒரு மொழியில் ஒர் எழுத்தினாலோ அல்லது பல எழுத்துக்கள் சேர்வதினாலோ உருவாகும் பொருள் தரக்கூடியதாக அமைகின்ற எழுத்துச் சேர்க்கைகள்...
ஆகும். அதாவது ஒர் எழுத்து தனித்தோ அல்லது சில எழுத்துக்களுடன் சேர்ந்தோ ஒரு பொருளினை உணர்த்துமாயின் அதனை சொல் என்று சுருக்கமாக குறிப்பிடலாம். இச் சொற்கள் தமிழில் பொதுவாக பதங்கள் அடிப்படையில் இரண்டு வகைப்படும் ஒன்று பகுபதம் மற்றையது பகாப்பதம். ஒரு சொல் பிரிக்கக்கூடியதாகவும் பிரித்த பின்னர் பொருள் தரக்கூடியதாகவும் இருக்கின்றபோது அதனை பகுபதம் என்போம். உதாரணமாக உண்டான் என்ற சொல்லை இவ்வாறு பிரிக்கலாம் "உண்+ட்+ஆன்" என்பதை காண்க.
பகாப்பதம் என்பது பிரிக்க முடியாத சொற்களை குறிக்க பயன்படும் அவ்வாறு பிரித்தாலும் அவை பொருள் தர மாட்டாது. உதாரணமாக "வா" என்ற சொல்லினை பிரிக்க முடியாது என்பதை காண்க. அவை தவிர தமிழ் மொழியில் உள்ள சொற்களை தமிழ் இலக்கணத்தில் சொற்களை பிரதானமாக நான்கு வகைப்படுத்துவர். அதாவது பெயர்ச் சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல் என்பது அவையாகும்.
ஒரு பொருளை குறிப்பதாகவோ அல்லது அதன் காரணத்தினை குறிப்பதகாகவோ அமைகின்ற வேற்றுமையினை ஏற்கின்ற சொற்களை நாம் பெயர்ச் சொற்கள் என்கின்றோம். பொதுவாக தமிழில் பெயர்ச் சொற்கள் காலம் காட்டுவதில்லை என்பதை கவனத்தில் கொள்க. இப்பெயர்ச் சொற்களை மேலும் இடப்பெயர், பொருட்பெயர், காலப்பெயர், சினைப்பெயர், பண்புப்பெயர், தொழிற்பெயர் என ஆறு வகையாக பிரிப்பர். இவைக்கான விளக்கங்களை பெயர்ச்சொல் தொடர்பான மற்றுமோர் கட்டுரையில் பார்க்கலாம்.
தொடர்ந்து வினைச் சொற்கள் என நாம் குறிப்பிடுவது "ஒரு சொல்லானது ஒரு செயலினை குறிக்குமாயின் அதனை வினைச்சொல் எனலாம்" பொதுவாக இவ்வினைச்சொற்கள் காலம் காட்டுவனவாக இருக்கும். உதாரணமாக "நடந்தான்" என்ற சொல்லை கவனிக்குக. இங்கு நட என்ற சொல் இறந்த காலத்தை ஏற்று வந்துள்ளது. இவ்வினைச் செற்களில் செய்வினை செயற்பாட்டுவினை என இரண்டு வடிவங்கள் உண்டு. அதாவது "கண்ணன் மரத்தை வெட்டினான்" எனற வாக்கியத்தில் உள்ள வினைச் சொல்லினை செய்வினை என்கின்றோம் அதே வேளை "கண்ணனால் மரம் வெட்டப்பட்டது" என்ற வாக்கியத்தில் உள்ள வெட்டப்பட்டது என்பதை செயற்பாட்டு வினை என்கின்றோம்.
இடைச் சொற்கள் என்பது பெயர்ச் சொற்களையோ அல்லது வினைச் சொற்களையோ அடுத்து வந்து பொருள் தரும் சொற்களாகும். உதாரணமாக "சொல்வேன்" என்ற சொல்லில் "சொல்லு" என்ற வினைச் சொல்லை அடுத்து இடைச் சொல் தோன்றியிருப்பதை காண்க. அதுத்து உரிச் சொற்கள் இவை பெயர், வினைச் சொற்களுடன் அவற்றின் இயல்பு குணம் என்பனவற்றினை விளக்க வருவன. அதாவது "சாலப் பொருந்தும்" என்பதில் சால என்ற உரிச் சொல் பொருந்தும் என்ற வினைச் செல்லினை மேன்மைப்படுத்த வருவதை காண்க. முக்கியமாக இடைச்சொற்கள், உரிச் சொற்கள் என்பன வாக்கியங்களில் பெயர்ச் சொல் வினைச் சொல் போன்று தனித்து நின்று பொருள் தர மாட்டாது என்பதை கவனத்தில் கொள்க.
இக்கட்டுரை..
- வாசகர் பார்வை: 555
- திருத்தியமைக்கப்பட்டது: 8 தடவைகள்
- இணைக்கப்பட்டது: Wednesday, 02 September 2009 05:30 இணைத்தவர் Administrator [Rathees]
- கட்டுரை இல: 143
















