இன்றைக்கு 14 வருடங்களக்கு முன்னர் பீஜிங்கில்
நடைபெற்ற நாற்காவது உலக மானாட்டில் உலக வங்கியின் அணுசரணையுடன் மூன்று நிலைகளை பெண்கள் அடைய வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது. பெண்களின் அடிப்படையும் அத்தியாவசியமானதுமான உரிமைகளை பெற்றுக்கொடுத்தல், அவர்களின் வாழ்க்ககையினை பெறுமதியுடையதாக மாற்றுதல், சிறந்த பொருளாதார வலுவின் மூலம் திருப்திகரமான...
வருவாயினை பெறுவதை உறுதிசெய்தல். என்பன அவையாகும். பால்நிலை சமத்துவம் என்பது அபிவிருத்திக்கும், வறுமைக் குறைப்புக்கும் அடிப்படையான ஒரு மூலம் என்பதனை வலியுறுத்திய உலக வங்கி சமத்துவத்தினை நிலைநாட்டுவதாக கையொப்பமிட்ட நாடுகளுக்கு பண உதவியும் வழங்கி வழிநடத்தியது. 1970 களிலேயே உலக வங்கி பால்நிலை தொடர்பான விடையங்களில் அக்கறையுடன் செயற்பட தொடங்கினாலும். அது 1995 இல் பீஜிங் ஒன்று கூடலுடன் இந்த விடையம் தொடர்பில் வலுவான நடவடிக்கைகளில் இறங்கியது.
இன்று பால்நிலை சமத்துவம் என்பது வறுமை ஒழிப்புக்கான திறவுகோல் என உலக வங்கியால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. சென்ற பத்துவருடங்களில் பெண்களின் வாழ்க்கை என்பது பல துறைகளிலும் நியாயமான அவர்களின் உரிமைகளை பெற்று உயர்ந்து வந்திருக்கின்றது. பொருளாதார அபிவிருத்தியையும். வறுமைக் குறைப்பையும் நிறைவேற்ற வேண்டுமாயின் பால்நிலை சமத்துவம் இன்றியமையாதது என்ற கருத்துக்கள் இன்று வலுவாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கின்றன.
உயர் கற்ப்பினி இறப்பு வீதங்கள், உயர் கல்வியில் தகுந்த இடம் இன்மை, அடிப்படை சுகாதார வசதிகள், அரச உயர் மட்டங்களின் பெண்களின் பிரசன்னம் போன்ற சில காரணிகளில் இன்றும் காணப்படும் விரும்பத்தகாத மாற்றங்கள் பால்நிலை சமத்துவம் தொடர்பின் மேலும் அடைய வேண்டிய பல ஏணிப்படிகளை சுட்டிக்காட்டுகின்றன. உலகமயமாதல், எயிட்ஸ் தொற்றுக்கள் போன்றன இவற்றினை இன்று பல நாடுகள் அடைவதற்கு முட்டுக்கட்டையாக இருந்திருக்கின்றன.
எனினும் இன்றைக்கு 30 வருடங்களுக்கு முன் மெக்சிக்கோவில் முதலாவதாக நடைபெற்ற பெண்கள் தொடர்பான மாநாட்டினை தொடர்ந்து இன்று பல அபிவிருத்தியடைந்த நாடுகளிலும் அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளிலும் பால்நிலை சமத்துவம் என்பது குறிப்பிடத்தக்களவு வளர்ச்சியை எட்டியிருக்கின்றது.
பெண்களின் கல்வியில் ஏற்பட்ட மாற்றம்.
சில குறைபாடுகள் தவிர பெண் கல்வி என்பது பெருமளவில் சிறந்த வளர்ச்சியை எட்டியிருக்கின்றது. தென் ஆசியா , ஆபிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் 20 ம் நூற்றாண்டின் பின் அரைப்பகுதியில் ஆரம்ப நிலை கல்வியினை பெறுகின்ற பெண்களின் உள்வாங்கல் அளவு இரண்டு மடங்காக அதிகரித்திருக்கின்றது. ஆண்களை காட்டிலும் வேகமாக அதிகரித்துவரும் இந்த தொகையானது கல்வியில் பால்நிலை இடைவெளியினை குறைத்திருக்கின்றது. கிழக்கு ஆசியா, பசுவிக் நாடுகள், லத்தீன் அமெரிக்க நாடுகள், ஐரோப்பா, மற்றும் கரீபியன் நாடுகளில் பெண்களின் ஆரம்ப கல்வி உள்வாங்கல் அளவு 100 வீதத்தினை எட்டியிருக்கின்றது. உலகளாவிய அடிப்படையில் 2000 ம் ஆண்டு கல்வியில் பால்நிலை இடைவெளி என்பது 5 வீதம் எனப்படுகின்றது. அது 1975 களில் 16 வீதமாக இருந்தமை குறிப்பிடத்தக்கது . அதே வேளை 1990 ம் ஆண்டு குறை வருமான நாடுகளில் 18 வீதமாக இருந்த இந்த இடைவெளி 2000 மாம் ஆண்டு 13 வீதமாக குறைக்கப்பட்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. சிறந்த உதாரணம் 1980 -2000 மாம் ஆண்டு காலப்பகுதியில் கேம்பியாவில் பெண்களின் ஆரம்ப கல்வி உள்வாங்கல் 36 இல் இருந்து 75 வீதமாக குறித்த காலப்பகுதியில் அதிகரிக்கப்பட்டது.
பெண்களின் ஆயுள் எதிர்பார்ப்பு.
சிறந்த உணவு வினியோகம், சுத்தமான குடிநீர் வசதிகள், மற்றும் மரணத்தை உண்டுபண்ணும் நோய்கள் பரவுவதை கட்டுப்படுத்தியமை போன்ற பல காரணிகளினால் பெண்களின் ஆயுட் காலம் அதிகரித்திருக்கின்றது. 2001 இல் உலக வங்கியின் கருத்தின்படி பெண்களின் ஆயுட்காலம் அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளில் 1970 களின் பின் 15 – 20 வருடங்களினால் அதிகரித்திருக்கின்றது. பெரும்பாலன அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில் பெண்களின் ஆயுட்காலம் 1990 களின் ஆண்களின் அளவினை எட்டியது. முதற்தடவையாக தென்னாசியாவில் பெண்களின் ஆயுட்காலம் ஆண்களை காட்டிலும் அதிகரித்திருக்கின்றது.
தொழிற்படையில் பெண்களின் பங்கு பற்றல்.
சில பிராந்தியங்கிளிலும் நாடுகளிலும் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை பெண்கள் தொழிற்படை தொடர்பாக பெற்றிருக்கின்றனர். கிழக்கு ஆசியா மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளில் 1970 களின் பின் தொழிற்படையில் பெண்களின் பங்களிப்பு சராசரியாக 15 வீதத்தினால் அதிகரித்திருக்கின்றது. விவசாயம் அல்லாத துறைகளில் பெண்களின் பங்களிப்பு 30 நாடுகளில் இன்று மந்த கதியிலேயே தொடர்ந்தாலும் சென்ற 1990 -2002 காலப்பகுதியில் 88 நாடுகளில் அது குறிப்பிடத்தக்க வளர்ச்சியினை அடைந்திருக்கின்றது. உலகளாவிய அடிப்படையில்; இன்றும் விவசாயம் தவிர்ந்த தொழில்களில் பெண்களின் சதவீதம் மிகக்குறைவே என சுட்டிக்காட்டுகிறது உலக வங்கி.
சொத்துக்களுக்கான உரிமைகளை அதிகரித்தலும் அரசியலில் உரிமைகளும்.
பீஜிங் மானாட்டினை தொடர்ந்து இந்த உரிமைகளும் பெண்களுக்கு இன்று கிடைக்க தொடங்கிவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. தென் அமெரிக்கா மற்றும் பல ஆசிய நாடுகளில் கணவன் மனைவி சொத்து உரிமைகள் வரைவிலக்கணப்படுத்தப்பட்டன, அத்தோடு பல நாடுகளில் பெண்கள் அரசியலில் குறிப்பிடத்தக்க தாக்கங்களை ஏற்படுத்தும் அளவிற்கு உரிமைகளை பெற்றிருக்கின்றனர். உதாரணமாக சில நாடுகளில் கோட்டா அடிப்படையில் பெண்களுக்கும் அரசியல் உயர் பீடங்களில் இடங்கள் வழங்கப்படகின்றன. 1993 களில் இந்தியாவில் உருவான கொள்கைகள், அதே போல் 2000 மாம் ஆண்டு பாகிஸ்தான், மற்றும் றுவாண்டா போன்ற நாடுகளையும் இங்கு குறிப்பிடலாம்.
சென்ற மூன்று தசாப்தங்களில் உலகின் தேசிய உலகளாவிய அனைத்து அபிவிருத்தி வேலைகளிலும் பெண்கள் தொடர்பில் விசேட முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கின்றது. பெண்கள் தொடர்பான பிரச்சினைகள் அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளுக்கு மாத்திரம் உரித்தானவை அல்ல இன்று பல அபிவிருத்தியடைந்த நாடுகளில் உயர் முகாமைத்துவப்பகுதிகள், அதிக வருமானம் கொண்ட தொழில்களில் பெண்களின் சதவீதம் இன்றும் உயர் மட்டத்தினை அடையவில்லை அத்தோடு பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறிப்பிடத்தக்களவு தொடர்ந்தவண்ணமே உள்ளன.
இக்கட்டுரை..
- இணைக்கப்பட்டது: Sunday, 16 August 2009 06:22 இணைத்தவர் Administrator [Rathees]
- கட்டுரை இல: 98













