அதிகரிக்கும் உலக சனத்தொகையுடன் இணைந்தே
உலகில் பட்டினியுடன் வாழ்வோரது தொகையும் அதிகரித்துவந்துள்ளது. இன்றைய உலகில் ஒரு பில்லியனுக்கும் அதிகமான மக்கள் நீண்ட வறுமையினால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.1 போசனையின்மையாலும், பட்டினியாலும் உலகில் இறப்பவர் தொகை வருடம் ஒன்றிற்கு முற்பது மில்லியனுக்கும் அதிகமாகும்.2 உலகில் இயற்கையாகவும் மனிதனின் தூண்டுதலாலும் ஏற்படும் இடர்கள் திடீர் வறுமை பட்டினி...
என்பனவற்றினை ஏற்படுத்திவிடுகின்றன. ஐக்கியநாடுகள் சபையின் உலக உணவு நிறுவனம் உலகின் பட்டினிக் குறைப்பு தொடர்பில் போரடிவரும் முன்னணி நிறுவனமாகத் திகழ்கின்றது.
அண்மைய காலங்களில் அதிகரித்த உயிரியல் எரிபொருள் உற்பத்தியானது பயிர்ச்செய்கை நிலங்களின் அளவினை குறைத்ததுடன் அது உலக உணவு உற்பத்தியில் குறிப்பிடத்தக்க தாக்கத்தினையும் உண்டுபண்ணியிருக்கின்றது. வருடம் ஒன்றிற்கு 78 மில்லியனால் அதிகரித்துவரும் சனத்தொகையும் இன்று உணவுக்கான கேள்வியை அதிகரித்ததுடன் சமமற்ற உணவுப்பங்கீடும் இதில் பாரிய பங்கு வகிக்கின்றது. அண்மைக்காலங்களில் அதிகரித்துவரும் நகராக்கமும் அதுசார்ந்த அபிவிருத்திகளும் விவசாய நிலங்களை ஆக்கிரமித்துவருவதுடன் உணவு உற்பத்தியில் வீழ்ச்சி ஏற்படுவதற்கும் ஒருவகையில் காரணமாகியிருக்கின்றன. மண்ணரிப்பு, நீர் வடிநிலங்கள் சுருங்குதல், பாலைவன எல்லைகள் விரிவடைதல் என விவசாய நிலங்கள் சுருங்குவதற்கான ஏனைய காரணங்கள் நீண்டு செல்கின்றன.
2000 தொடக்கம் 2008 வரையான காலப்பகுதியில் உணவு உற்பத்தி அதிகரித்தே வந்திருக்கின்றது. எனினும்
உணவு நுகர்ச்சி அதைவிட அதிகளவான வேகத்தில் அதிகரித்து வந்தது.3 அபிவிருத்தியடைந்த நாடுகளில் உள்ள மக்கள் வறிய நாடுகளில் உள்ள மக்களைக் காட்டிலும் பன்மடங்கு நுகர்ச்சியைக் கொண்டு காணப்படுகின்றனர். புதிய விவசாயப்புரட்சி ஒன்று உலகில் உணவு உற்பத்தியை அதிகரித்து பட்டினியை குறைக்கும் என்கின்றனர் சிலர். ஆனால் ஏற்கனவே தொடங்கிய பசுமைப்புரட்சியின் தாக்கங்கள் இன்றும் விவசாயம் சார்ந்து நீண்டநாள் விரும்பத்தகாத விளைவுகளை ஏற்படுத்திக்கொண்டிருக்கின்றன. தென்னாசிய நாடுகளை பொறுத்தவரை கனிசமான நகரமக்களே வறுமையின் பிடியில் வாழ்கின்றனர். இது இப்பிராந்தியத்தில் அதிகரித்தச்செல்லும் சேரிப்புர மக்கள் தொகையுடன் இணைந்து அதிகரிக்கும் பிரச்சினையாகும்.
இப்பிராந்தியத்தில் காணப்படும் சமமற்ற வருமானம் இங்கு வறுமை ஒழிப்புக்கு சாவாலாக இருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. 1990 தொடக்கம் 2002 வரையான காலப்பகுதியில் தலா ஒருவரக்கான உணவு இருப்பு இப்பகுதியில் அதிகரித்தே வந்தது எனினும் பட்டினி, போசனை இன்மையினால் வாடுபவர்களின் தொகையும் 2005 இல் 300 மில்லியனை எட்டியிருந்தது.4 தென்னாசியாவின் பட்டினி அதிகரிப்பினை கட்டுப்படுத்துவதற்கு இப்பிராந்தியாத்தில் உணவின் இருப்பினை அதிகரிப்பது மட்டும் போதாது அத்துடன் உணவினை அனுபவிக்கக்கூடிய வலுவான வருமானத்தினை மக்கள் பெறுவதனையும் உறுதி செய்யவேண்டிய தேவை இன்று உணரப்படுகின்றது.
1,2-http://www.global..unger.html 3-FES Briefing Paper July 2008 4- Human Development in South Asia 2005
இக்கட்டுரை..
- வாசகர் பார்வை: 1959
- இணைக்கப்பட்டது: Wednesday, April 21 2010 15:58 இணைத்தவர் Administrator [Rathees]
- கட்டுரை இல: 232


















