சுதந்திரத்துக்கு பின்னரான இலங்கையின் காடழிப்பு
பெரும்பாலும் அதிகரித்த குடித்தொகை மற்றும் அபிவிருத்தித்திட்டங்களினால் ஏற்பட்டது எனலாம். சுதந்திர இலங்கையில் ஏற்படுத்தப்பட்ட அபிவிருத்தி நடவடிக்கைகளினால் 1983 – 1992 வரையான காலப்பகுதிக்குள் இலங்கையின் காட்டுப்போர்வையானது 37 சதவீதத்தினால் குறைவடைந்தது. நாட்டின் பொருமளவான ஆற்று வடிநிலம் சார் அபிவிருத்தித் திட்டங்கள் வறள் வலயக்காடுகள் பலவற்றின் அழிவுடனே ஆரம்பிக்ப்பட்டமை இங்கு...
குறிப்பிடக்கூடியது. இந்த வகையில் சுதந்திரத்துக்கு பின்னர் ஏற்பட்ட காடழிப்பு நடவடிக்கைகளை நாம் சில சிறிய தலைப்புக்களின் கீழ் விரிவாக நோக்கலாம்.
- அபிவிருத்தி நடவடிக்கைகளும் காடழிப்பும்
நாட்டின் பிரதான சக்தி மூலமான நீர் மின்சாரம் சார் அபிவிருத்திகளின் பொருட்டு விக்டோறியா, கொத்
மலை, இரந்தெனிகல, இரந்தெம்பை, பொல்கொல, திட்டங்களுக்காக பல்லாயிரக்கணக்கான ஏக்கர் காடுகள் அழிக்கப்பட்டன. இவைதவிர கைத்தொழிற்சாலைகளின் உருவாக்கம், மற்றும் கால்வாய் அமைப்புக்கள் என்பனவற்றிற்காகவும் பெருமளவான காடுகள் அழிக்கப்பட்டன. உதாரணமாக 453 sq. kms பரப்பளவில் மாதுறு ஓயா அபிவிருத்தித் திட்டம் முன்னெடுக்கப்பட்டது. இவைதவிர இலங்கையில் ஆரம்ப காலங்களில் இருந்த மலைக்காடுகள் 8000 சதுர கி;மீ இன்று பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களுக்காவும் அழிக்கப்பட்டு வெறும் 8 மூ மட்டுமே இன்று எஞ்சியுள்ளமையும் இங்கு எடுத்துக்காட்டக்கூடியதாகும். 1950 களின் பின்னரான இலங்கையின் நிலப்பாவனையினை காட்டும் FAO இன் அறிக்கை ஒன்றில் இருந்து பெறப்பட்ட வரைபினையே படம்-2 காட்டுகின்றது. இதில் அதிகரித்த நிலப்பாவனை (சிவப்பு கோட்டினால் காட்டப்பட்டுள்ளது) எவ்வாறு காட்டுப்போர்வையின் (கருப்புக் கோட்டினால் காட்டப்பட்டுள்ளது) குறைவுக்கு காரணமாகியது என்பதை நோக்குக.
- வறள் வலயக் குடியேற்றங்களும் காடழிப்பும்
இலங்கையின் ஈரவலயக் குடியிருப்புக்களின் செறிவாக்கத்தினை குறைப்பதற்காக அப்பிரதேச மக்கள் வறள்வலயம் நோக்கி நகர்ந்தனர் அல்லது நகர்த்தப்பட்டனர். இதனால் பெருமளவான வறள்வலயக் குடியிருப்புக்கள் நாட்டின் கிழக்கு, வடக்கு, வடமத்திய பிரதேசங்களில் ஏற்படுத்தப்பட்டன. அவற்றிற்கான இடங்கள் பெருமளவு வறள்வலய காடுகளின் அழிவுடனேயே பெறப்பட்டது. வஸ்கமுவ, சோமாவதிய, மற்றும் மாதுறு ஓயா பாதுகாப்பு வனங்களை அண்டிய பகுதிகளில் ஏற்படுதட்தப்பட்ட குடியிருப்புக்களினால் இன்றும் அப்பகுதி வனங்களுக்கு அச்சுறுத்தல்கள் இருந்து வருவது நாம் அறிந்ததே. மகாவலி அபிவிருத்தித் திட்டதின் C பிரிவில் 6 தொடக்கம் 9 வரையான தொகுதியில் மாத்திரம் 17,000 கெக்டெயர் நிலப்பரப்பு உள்ளடங்கியதுடன் 18,000 குடும்பங்கள் இப்பிரதேசத்தில் குடியமர்த்தப்பட்டன.
- விவசாயமும் காடழிப்பும்.
இலங்கையில் விவசாயத்திற்கான காடழிப்பு காலணித்துவ காலத்திலேயே ஆரம்பிக்கப்பட்டிருந்தது. கோப்பிச் செய்கை மற்றும் தேயிலைச் செய்கை என்பனவற்றிற்காக பெருமளவான காடுகள் அழிக்கப்பட்டன. சேனைப்பயிர்ச்செய்கையின் போதும் காடுகளின் அழிப்பு அதிகமாகவே காணப்பட்டது. நாட்டின் தேசிய வருமானத்தில் விவசாயம் 20 (2001) வீத பங்கினை கொண்டிருப்பதனால் அதன் அபிவிருத்தியில் அரசு தொடர்ந்து அக்கறை
காட்டியதுடன் பெருமளவான காடுகள் காணப்பட்ட பகுதிகளில் விவசாய நடவடிக்கைகளுக்கும் ஊக்குவிப்பினை வழங்கியது. இலங்கையில் நீண்ட காலமாக இருந்துவருகின்ற சேனைப்பயிர்ச்செய்கையினால் 1979 ம் ஆண்டு 5 மில்லியன் மக்கள் 377000 ஹெக்டெயர் அரசாங்கக் காணிகளில் சேனைப்பயிர்ச்செய்கையில் ஈடுபட்டிருந்தனர். என அரசாங்க அறிக்கை ஒன்று தெரிவிக்கின்றது.
1950-1980 களுக்கு இடையில் சேனைப்பயிர்ச்செய்கைக்கு உட்படுத்தப்பட்ட காணியின் அளவு 120000 ஹெக்டயாகளாக அதிகரித்தது. இதனால் இந்நூற்றாண்டின் ஆரம்பத்தில் 70 வீதமாக இருந்த இலங்கையின் காட்டு நிலப்பரப்பின் சதவீதம் 1956 இல் 44 சதவீதமாகவும் 1989 இல் 24 சதவீதமாகவும் குறைந்தது. 1956-1989 களுக்கு இடையில் இலங்கையின் காடு அழிப்பு வீதம் 0.7 வீதமாக இருந்ததாக இலங்கையின் சுற்றாடல் அறிக்கை ஒன்று கூறுகின்றது. 1956 களின் பின்னர் அதிகரித்த காடழிப்பு வேகத்திற்கு அக்காலத்தில் அதிகரித்த விவசாய விரிவாக்கமே அதிக காரணமாக இருந்தது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
இக்கட்டுரை..
- வாசகர் பார்வை: 1921
- இணைக்கப்பட்டது: Thursday, September 09 2010 07:19 இணைத்தவர் Administrator [Rathees]
- கட்டுரை இல: 241


















